வாக்குக்கு பணம் என்பது தமிழகம் முழுக்கவே உள்ளது. மக்களிடத்தில் இது போன்ற ஊழல் மண்டிக் கிடக்கிறது. அது ஒட்டுமொத்த சமூகத்தின் நேர்மையை கேள்வி கேட்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெரும்பாலானவர்கள் அதை ஊழல் என்றே உணர்வது இல்லை. சிலர் அவர்களுக்கு இருக்கும் குற்ற உணர்வை மறைப்பதற்காக தங்களுக்கு தாங்களே நொண்டி சாக்குகளை சொல்லிக் கொள்கின்றனர். அதற்கு எதிராக ஒரு இயக்கமாக செயல்பட்டு முற்றிலும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் பெருந்தலையூர் என்னும் கிராமத்தில் 2024 மக்களவை தேர்தலில் இந்த ஊழலுக்கு எதிரான ஒரு ஒன்றரை மாதம் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் 75 சதவீதம் பேர் பணம் வாங்காமல் இருந்து அதில் வெற்றியும் கண்டுள்ளோம். பெருந்தலையூர் பணி
11.01.2025 முதல் 28.01.2025 வரை 18 நாட்கள் இதே நோக்கத்தை முன்வைத்து காந்தி வந்து தங்கி இன்று அவருடைய நினைவாகமாக உள்ள கோவை பொத்தனூரில் தொடங்கி திண்டுக்கல் காந்தி கிராமம் வழியாக ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யம் வரை மொத்தம் 400 கிலோமீட்டர் நடந்து பிரச்சாரம் செய்துள்ளோம். இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இந்த 400 கிலோமீட்டரையும் முழுவதுமாக நடந்து உள்ளோம். சில நண்பர்கள் ஒரு நாள், ஐந்து நாள், ஒரு வாரம் என்று பகுதி நேரமும் நடந்து உள்ளனர். இந்த பாதயாத்திரையின் ஒற்றை பிரச்சாரம் “இது காந்தியின் தேசம் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்” என்பதே. அனைவரும் ஒரே மாதிரி காந்தி படம் போட்ட மேலாடை அணிந்து நடந்து சென்றோம். இந்த நடை பயணத்தின் இன்னொரு முக்கியமான நோக்கம் கடைகளில் சாப்பிட்டு ஹோட்டல்களில் தங்கி செல்லாமல் பொது மக்களின் உதவியுடன் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு அவர் அளிக்கும் இடத்தில் தங்கி செல்ல வேண்டும் என்பது. பதினெட்டு நாள் இரவும் அது போல் மக்களின் வீடுகளில், மண்டபங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், கோவில்களில் என்று பல்வேறு இடங்களில் தங்கி உள்ளோம். பதினெட்டு நாளில் வேறு வழியே இல்லாமல் கடையில் கடையில் சாப்பிட்டது அதிகபட்சம் ஆறு வேளை இருக்கும்.
தமிழக மக்கள் எங்களை கை விட்டு விட மாட்டார்கள் என்று நம்பி இந்த பயணத்தை மேற்கொண்டோம். அவ்வாறே நடந்தது. மக்கள் செய்யும் செயலை எதிர்த்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்திற்கு மக்களிடம் இருந்து இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்ததே தமிழகத்திற்கு ஒரு வெற்றி என்றே பார்க்கிறோம்.
போத்தனூரில் தொடக்க நிகழ்வு
போத்தனூரில் பயணம் தொடங்கிய காந்தியவாதி கண்ணன் தண்டபாணி ஒரு உரை நிகழ்த்தி எங்கள் பயணத்தை தொடங்கி வைத்தார். அங்கு சுமார் 30 பேருக்கு மேற்பட்டோர் வந்து கூடி இருந்தனர். அனைவரும் கொஞ்ச தூரம் எங்களோடு நடந்து வந்தனர். இறுதி நாள் அன்று வேதாரண்யத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக எங்களுக்கு “ஆறு லட்சம் காலடிகள் விழா” என்ற பெயரில் ஒரு நிறைவு விழாவும் நடத்தப்பட்டது. அதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம், எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், பேராசிரியர் பழனிதுரை ஆகியோர் வந்து எங்களை வாழ்த்தி இருந்தனர். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் கையொப்பமிட்ட சான்றிதழும் எங்களுக்கு வழங்கப் பட்டது.
இந்த பயணம் ஒரு அடையாள அடிப்படையில் தொடங்கப்பட்டது. மக்களின் இந்த ஊழலை பேசு பொருளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் கண்ணெதிரே சிலர் மாறுவதாக சொன்னார்கள். இதை ஒரு தொடர் இயக்கமாக ஆண்டு தோறும் மேற்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு உண்டு. இந்த நடைபயணத்தின் ஒவ்வொரு நாள் அனுபவத்தையும் எழுதியுள்ளேன்.
வேதாரண்யத்தில் நிறைவு விழா
சிபி எழுதிய நடைபயண கட்டுரைகள்:
முதல் நாள்
தூரத்தில் இருந்து ஒரு தினம் மெல்ல மெல்ல நம் அருகில் வருவது படிப்படியாக நம்முள் ஒருவித கிளர்ச்சியூட்டுவதை உணர்வோம். அப்படி ஒரு தினம் எங்கள் அருகில் வந்தது. ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம். புதிய ஆச்சரியங்களை எதிர்நோக்கி அந்த முதல் அடிக்கான கணம் அருகில் வந்தது. ஜனவரி 11 அன்று மாலை 4 மணிக்கு போத்தனூரில் உள்ள காந்தி நினைவகத்தில் அந்த முதல் அடியை எங்களுடன் வைப்பதற்கு 30 பேர் கூடியிருந்தனர். சிவராஜ் அண்ணா சொல்லி வேலவன் என்பவர் ஆலம் பள்ளியில் இருந்து 10 மாணவர்களை அழைத்து வந்திருந்தார். மூத்தவர்கள் எங்களை பார்த்து அடையும் அதே உவகையை அந்த சிறுவர்களை பார்த்து நாங்கள் அடைந்தோம். அவர்களுடன் சில நிமிடங்கள் முனை அமைப்பு குறித்து பேசினேன்.
அந்த சிறுவர்களுடன் விளையாடியதில் எனக்கு சற்று கால் ஓய்ந்துவிட்டது. அனைவரையும் முன்னால் போகச் சொல்லிவிட்டு நானும் அனுவும் பின்னால் வந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிமீ அவர்களுக்கும் எங்களுக்கும் இடைவெளி ஏற்பட்டது. வண்டியில் கடப்பவர்கள் முன்னால் செல்பவர்களை பார்த்துவிட்டு அவர்களிடம் எதுவும் பேசாமல் எங்களிடமே வந்து வண்டியை நிறுத்தி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தனர்.
ஜனவரி 13 மதியம் செஞ்சேரி புத்தூரில் நாங்கள் ஓய்வெடுப்பதற்காக பேடைக் காளி பாளையத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் அங்குள்ள PAP அலுவலகத்தை எங்களுக்காக ஏற்பாடு செய்து கொடுத்தார். கூடவே எங்களுக்கு எதாவது தேவை இருந்தால் செய்து தருமாறு அங்கு இருந்த பணியாளரிடம் சொல்லியிருந்தார். நாங்கள் அங்கு செல்வதற்கும் அவர் தன் வேலையை முடித்துவிட்டு அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. அவர் வந்து எங்களுக்கு மதிய உணவு அளித்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அங்கிருந்து பேட்டைக் காளி பாளையம் வருவதற்கு சில குறுக்குத் தடங்களையும் சொல்லிவிட்டுச் சென்றார்.
பயணம் தொடங்கிய முதல் நாள் எதுவுமே தெரியாது. எந்த வலியும் இருக்காது. கூடுதலாக கூட சில கிலோமீட்டர்களை நடந்து கடந்து விட்டோம். இரண்டாம் நாள் காலை தான் அதன் விளைவு தெரிந்தது. சுமைகளை தூக்கியதில் தோள்பட்டையில் தொட்டால் ஒரு சின்ன வலி இருந்தது. பாதம், முட்டிக்கு கீழ் வலிப்பது போல் இருந்தது, ஆனால் பெரிய வலியில்லை. அன்றும் சில கிலோமீட்டர்கள் கணக்கிட்டதை விட கூடுதலாக நடந்திருப்போம். இரண்டாம் நாள் மாலை பிடித்தது வலி. தோள்பட்டையில் ரத்தம் கட்டிவிட்டது. படுக்கவே முடியவில்லை. எப்படி திரும்பி படுத்தாலும் வலித்தது. 482 டிகிரி கோணத்தில் படுத்தால் கூட வலி துளி கூட குறைந்தபாடில்லை. காலும் வலி எடுக்க தொடங்கியது. தொடை உரைந்து உரைந்து எனக்கு தோல் உரிந்து விட்டது. அகட்டி அகட்டி வைத்தே நடக்க முடிந்தது. அன்றைய இரவு செஞ்சேரியில் ஒரு வலி மிகுந்த இரவாக இருந்தது.
நெடுஞ்சாலையில் நடப்பது பெரும் சலிப்பூட்டுவது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அந்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம். ஜனவரி 16 காலை நான் வலைப்பூ எழுதியதால் நடக்க தாமதமாகிவிட்டது. எனக்காக கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு மற்றவர்கள் எட்டு மணிக்கு கிளம்பி விட்டனர். நானும் சௌமியாவும் ஒன்பது மணிக்கு நடக்கத் தொடங்கினோம்.
நல்ல தூக்கம். ஜனவரி 17 காலை தாமதமாக எழுத்து பொறுமையாக கிளம்பினோம். அம்மாவும் எங்களுடன் சேர்ந்து நடப்பதாக சொன்னாள். முதலில் இருந்தே அம்மாவிற்கு கடும் கால்வலி உள்ளது. அதனால் நான் நடக்க வேண்டாம் என்று சொன்னேன். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வந்தே தீர்வேன் என்று அடம் பிடித்து சண்டையிட்டு கூட வந்து பத்து கிலோமீட்டர் நடந்தாள்.
நேற்று 28 கிமீ நடந்து வந்த களைப்பு, இன்று ஓய்வுநாள் போன்றவை சேர்ந்து காலை அனைவரும் தாமதமாகவே எழுந்தோம். பாட்டி எங்களுக்காக நேரமாகவே எழுந்து காத்திருப்பதாக சொன்னார்கள். எழுந்து குளித்து கிளம்பி நானும், கௌதமும் நாங்கள் போன முறை வந்த போது வைத்த மரங்களை சென்று பார்த்தோம். அங்கிருந்து நாங்கள் வரும் போது சரியாக பாட்டி படிகளில் இறங்கிக் கொண்டு இருந்தார். லைலா பானுவும், மஞ்சரி அக்காவும் கையை பிடித்திருந்தனர்.
ஜனவரி 19 அதிகாலையில் இருந்தே மழை வந்து கொண்டிருந்தது. நான் ஐந்து மணிக்கு மேல் தான் தூங்கவே தொடங்கினேன். ஆறு, ஆறரை மணிக்கு எழுந்து விட்டேன். மழையில் நனைந்து கொண்டே நானும் கௌதமும் காந்தி கிராமம் வந்ததற்கு ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்பதற்காக அங்கு வெட்டிப் போட்டிருந்த செடிகளை எடுத்து போட்டோம்.
பயணங்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பது அந்த பயணத்தை செழுமையாக்குவதில் மிக முக்கியமான பங்கு. எனக்கு தற்போது இருக்கும் நண்பர்களில் சிறந்தவர்கள் தான் என்னுடன் இந்த பயணத்திற்கு வந்துள்ளார்கள். ஆனாலும் அவர்கள் இன்னொருவர்கள். வேறு ரசனை கொண்டவர்கள். வேறு பார்வை கொண்டவர்கள். வேறு எல்லைகள் கொண்டவர்கள். என்னுடன் முரண்கள் கொண்டவர்கள். எவ்வளவு குறைவான முரண்களை கொண்டுள்ளோமோ அவ்வளவு இணக்கமானவர் என்று சொல்லிக் கொள்ளலாம். அப்படி இந்த குழுவில் எனக்கு இணக்கமானவன் கௌதம்.
பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து காலை எழுந்து கிளம்பியவுடன் மீண்டும் அந்த ஐம்பது மீட்டரை நடந்து தலைவர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து நாங்கள் யார், எதற்கு வந்துள்ளோம் என்றெல்லாம் சொன்னோம். அவர் முகத்தின் எந்த சதையும் ஒரு அசைவையும் ஏற்படுத்தாமல் கண் கீழே குவிந்து திறன் பேசியை பார்த்துக் கொண்டு இருந்தது. அவர் வெறுமனே தலையை மட்டும் அசைத்து, “ம்” என்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டு இருந்தார். நாங்கள் சொல்வதை பாதியில் நிறுத்திவிட்டு நன்றியை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்.
ஜனவரி 22 ஆம் தேதி காலை திருச்சியிலுள்ள துவரங்குறிச்சியில் இருந்து துண்டு பிரசுரங்களை கொடுத்தபடியே நடக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ஒருவர் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு டீ குடிக்கும் படி அழைத்தார். அவருடைய நண்பர்கள் சிலரும் வந்து பேசினர். கொஞ்ச நேரம் மிகவும் பரபரப்புடன் பேசிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம், இறுதி நாள் விழா என்றைக்கு என்று பல கேள்விகளை கேட்டு அவசர அவசரமாக ஏற்கனவே அவை குறிப்பிட்டிருக்கும் துண்டு பிரசுத்தில் மீண்டும் எழுதினார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போதே அவர் மீண்டும் அதை எடுத்து பார்க்கப் போவது இல்லை என்று எனக்கு தோன்றியது.
முந்தைய நாள் செருப்பு போட்டு நடந்து கடும் கால்வலியில் விடிந்ததே தெரியவில்லை. ஏதேதோ கோணங்களில் திருக்கிக் கிடந்தோம். கைகளை கண்டபடி மடக்கி வைத்து படுத்து எழும் போது இடது கை மாபெரும் வலியை அளித்துக் கொண்டு இருந்தது. இன்று காலையில் இருந்து எங்களுக்கு உணவு வழங்குவதில் பெரும் போட்டியே இருந்தது. காலை உணவு காரைகுடியை சேர்ந்த நாராயணன் எடுத்து வருவதாக சொல்லி இருந்தார். மதிய உணவு சுனீல் கிருஷ்ணன் கொண்டுவருவதாக சொல்லி இருந்தார். இரவு உணவு புதுக்கோட்டையில் சிதம்பரம் அவர்களின் வீட்டில். இடையில் உமையாள் மற்றும் தேனப்பன் ஆகியோரும் வந்து எங்களுடன் சேருவதாக இருந்தனர். அவர்களை உணவு கொண்டு வந்து விட வேண்டாம் என்று கையை கட்டிப் போட்டிருந்தோம்.
மதியம் நாங்கள் ஓய்வெடுக்க ஒதுங்கிய கோவிலில் எங்களை பார்ப்பதற்காக ஒவ்வொரு கார்களாக வந்து ஒரு படையே திரண்டு விட்டது. முதலில் சுனில் கிருஷ்ணன் அவர்களின் கார் வந்தது. அதில் சுனில் கிருஷ்ணன், அவருடைய மனைவி மானசா, இரு குழந்தைகள் சுதீர் சந்திரன் மற்றும் சபர்மதி, மற்றும் கணேஷ் அவர்கள் ஆகியோர் இருந்தனர். அடுத்ததாக எங்கள் முதுகுப் பைகளை ஏற்றிச் சென்ற நாராயணன் அவர்களின் கார். அதில் தான் எங்களுக்கான மதிய உணவும் உள்ளது. மூன்றாவதாக உமையாள் அவர்களின் காரில் அவரும் தேனப்பன் அவர்களும் வந்தனர். ஒரு குட்டி மாநாடு போல் ஆகிவிட்டது. கடும் பசி அனைவருக்கும்.
முந்தைய நாள் இரவே நாங்கள் திட்டமிட்டதை விட கூடுதலாக நடந்து விட்டதால் இன்று நடக்க வேண்டிய தொலைவு குறைவாகவே இருந்தது. கால்வலி அதிகமாக இருந்ததாலும் இன்று குறைவான தொலைவே நடக்க வேண்டும் என்பதாலும் மிகவும் நிதானமாக கிட்டதட்ட 10 மணி வாக்கில் தான் கிளம்பினோம். சிதம்பரம் அவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் இந்த வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவருடைய மாமியார் மட்டுமே இந்த வீட்டில் இருப்பதாகவும் இவர்கள் எல்லாம் எங்களுக்காக இங்கு வந்ததாகவும் சொன்னார்கள். அவர்கள் குடும்பத்தில் அனைவருடைய பேச்சிலும் ஒரு நிதானம் இருந்தது.
காலை 8 மணிக்கு ஆலங்குடியில் இருந்து பயணம் தொடங்கியது. மேஜர் கோகுல் பெங்களூரில் இருந்து சரியாக நாங்கள் கிளம்பும் நேரத்திற்கு வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். வெயில் நடையில் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு முழுக்கை வெள்ளை பனியன், தலைக்கு ஒரு கைக்குட்டை, கால் வலிக்கு எண்ணை என்று பல முன்னேற்பாடுகளுடன் தான் வந்திருந்தார். ஆலங்குடியிலேயே காலை உணவு. அங்கிருந்து கிளம்பி மடத்திக்காடு என்னும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்
எங்கள் உடைகள் அனைத்தும் உமையாளிடம் உள்ளது. நேற்று முன்தினம் துவைப்பதற்காக வாங்கி சென்றது நேற்று மாலை ஈரம் காயாததால் கொண்டு வர இயலவில்லை. இன்று காலை கொண்டு வருவதாக சொல்லி இருந்தார்கள். எட்டு மணி வாக்கில் வந்து சேர்ந்தார்கள். எங்களுக்காக அதிகாலையா நள்ளிரவா என்று தெரியாத வேளை இரண்டு மணிக்கு எழுந்து உணவு சமைத்து எடுத்துக் கொண்டு நாலரை மணிக்கு கிளம்பி கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து வந்து சேர்ந்திருந்தார்கள். தற்செயலாக எங்களை பற்றி அறிந்து ஒரு வேளை உணவு கொடுக்க வந்தவர்கள் இன்று எங்களுடன் நீங்கா உறவாக மாறிவிட்டிருந்தார்கள்.
துவரங்குறிச்சியில் பாலு என்பர் வீட்டில் தங்கி இருந்தோம். கடைசி நாள் நடக்க வேண்டிய தூரத்தை குறைத்தால் நிறைவு விழாவில் பங்கேற்பது எளிதாக இருக்கும் என்று இன்று கூடுதல் கிலோமீட்டர் நடப்பதாக திட்டம். அதனால் இயன்றவரை சீக்கிரம் கிளம்பலாம் என்று தயாராகிவிட்டோம். அப்போது ஒருவர் இங்கு ஒரு காந்தி சிலை உள்ளது அதற்கு மாலை அணிவித்து விட்டு பயணத்தை தொடங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இன்றைய காலை துளசியாப்பட்டினத்தில் தொடங்கியது. இன்று தான் இந்த பயணத்தின் கடைசி நாள் என்பது தான் காலை எழுந்தவுடன் இருக்கும் முதல் எண்ணம். இரண்டு நாட்களாக இருந்த உளச்சோர்வு பெரும்பாலும் நீங்கி பெரும் நிறைவை நோக்கி நடக்கத் தொடங்கினேன். இது சமூகத்தை நோக்கி நாங்கள் இட்ட அறைகூவல். கூடவே எனக்கு நானும்.
நெடுநாட்கள் நீண்ட தூர நடைப்பயணம் குறித்த ஆசை இருந்தது. 2018 இல் Forrest Gump திரைப்படம் பார்த்தது முதல். அதுவே, இந்த பயணத்தில் நான் கலந்து கொண்டதன் நோக்கம், திறந்த வானின் கீழ் வெகு நேரம் இருக்கும் வாய்ப்பும், அது அகத்திற்கு என்ன அளிக்கும் என்பது தான்.
இரண்டாம் நாள் காலை 6:30 மணிக்கே ஊருக்குள் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு 7:30 மணிக்குள் கிளம்பி விட வேண்டும் என்பது திட்டம். இரவில் சிலர் தூக்கத்தில் பேசியபடி இருந்தனர். குறட்டை ஒலியும் கூட. எல்லோருக்கும் அவற்றை மீறி நல்ல தூக்கம். காலை 5 மணிக்கே எழுந்து நான், லைலா, அர்ச்சனா குளித்து தயாராகி விட்டோம். பிற நால்வரும் தயாராவதற்குள், அர்ச்சனாவின் பையில் இருக்கும் எடையை பகிர்ந்துக்கொள்ள, ஒவ்வொரு பொருளாக வெளியில் எடுத்தோம். உள்ளே ஒரு சந்தைக்கடை இருந்தது.
முதல் இரண்டு நாட்களும் வழி மாறி சென்றமையால் திட்டமிட்டதை விட 5 கி.மீ ஆவது கூடுதலாக நடந்து இருப்போம். இந்த முறை, எங்களுக்கு தங்கும் இடம் வழங்கிய செல்வராஜ் அவர்களே வழியைக் கச்சிதமாக சொல்லிவிட்டார். கூகுளும் அதையே காட்டியது.
பேட்டைக்காளிப் பாளையத்தில் இருந்து நாங்கள் காலையில் தாமதித்து தாராபுரம் நோக்கி கிளம்பினோம். வழியில் சில கிராமங்களில் மக்களுடன் பேசியபடி வந்தோம். சில வார்த்தைகளுக்கு மேல் நான் எதுவும் பேச முடியாமல் திணறினேன். பசி, ஒரு நாள் கூலி என்று சொன்னார்கள். சிபி மேற்கொண்டு பேசினான். பாவக்காசு உங்களுக்கு நிம்மதி அளிக்குமா, அதை வாங்கும் ஒருவரையும் வாங்காத ஒருவரையும் நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்ற கேள்விகளுக்கு அவர்கள் அமைதி காத்தனர்.
காலை எழுந்தது முதலே, எப்படியாவது அன்று நூறாவது கி.மீ நடந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு மேலோங்கி இருந்தது. ஏற்கனவே 75 கி.மீ நடந்து விட்டிருந்த நிலையில் கள்ளிமந்தையம் வரை நடந்தால், திட்டத்தின் படி நூறாவது கி.மீ நடந்ததாகிவிடும்.
முந்தைய நாள் இரவுதான் பயணம் முடிவானது. மூன்று ஊர்களும் 15 கிலோமீட்டர் இடைவெளியில் நேர்கோட்டில் இருந்தன. திருப்பூரிலிருந்து பல்லடம் சென்ற பிறகுதான் மூன்று ஊர்களுக்கும் பெரிதாக பேருந்து தொடர்பு இல்லை எனத் தெரிந்தது. பல்லடத்திலிருந்து செஞ்சேரிக்கு மட்டுமே பேருந்து இருந்தது. செஞ்சேரி சென்றுவிட்டோம். அங்கிருந்த கோவிலில் ஒருநாள் இரவு தங்க இயலுமா எனக் கேட்டோம்.
4 Responses
ஆச்சரியமாகவும் மனநிரைவாகவும் உள்ளது உங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் நன்கொடைக்கு வங்கி கணக்கு குறிப்பிடவில்லை முனை அமைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
அருமையான முயற்சி. தங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். முனை அமைப்பு மென்மேலும் பல சிறப்புகள் பெறட்டும்.
பயணம் சிறக்கட்டும். எடுத்த பணி சிறப்பு.வாழ்த்துக்கள்.பயணத்தில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்
All the very best, take care and safe travel