
தேர்தல் அரசியல் அறிக்கை:
முனை அமைப்பு சமூக மாற்றத்தை விரும்பும் அமைப்பு. அதன் ஒரு பகுதியாக அரசியல் மாற்றத்தையும் விரும்புகிறது. அதிகார அரசியல், தேர்தல் அரசியல் எனும் இரு பிரிவுகளில் இப்போதைக்கு தேர்தல் அரசியலில் முன்னேற்றத்தை காண விரும்புகிறது. ஆகவே நாங்கள் ஒரு லட்சிய தேர்தல் முறை, ஒரு லட்சிய வாக்காளர் மற்றும் ஒரு லட்சிய அரசியல் கட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என எங்கள் விருப்பத்தை இங்கு தெரிவிக்கிறோம். சிறிது சிறிதாக இதை நோக்கி நாம் முன்னேறுவோம்.
முன்மாதிரி தேர்தல் முறை:
அனைத்து அரசியல் கட்சிகளின் ஆண்டு வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட வேண்டும். அதிக பணம் செலவழித்து பிரச்சாரம் செய்யும் முறை தடுக்கப் பட வேண்டும். பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு அனைத்து அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கும் சரிசமமாக வழங்க வேண்டும். புதிய கட்சிகளுக்கு என ஒரு தனி நேரத்தையும் ஒதுக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அங்கீகாரம் பெற்ற தொலைக் காட்சிகளில் ஒவ்வொரு கட்சிக்கும் சில மணி நேரம் என ஒதுக்கப் பட்டு அதில் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அல்லது தேசத்துக்கும் தனி நேரம் அதே சமயம் தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கப் பட்டு ஒரு அட்டவணையை வெளியிட்டு அதன்படி பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். வேறு எங்கும் எம்முறையிலும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. தொகுதி ரீதியாக ஒரு வலைத்தளம் உருவாக்கப்பட்டு அதில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் வேட்பு மனு விபரத்தை வெளியிட வேண்டும். சின்னத்தை மட்டும் பார்த்து வாக்களிக்கும் பாமர முறை மாற வேண்டும். ஒரு கட்சி ஒருமுறை தான் ஒரு சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வாக்குக்கு பணம் அளிப்பதை பெறுவதை தடுக்கும் நடவடிக்கை தீவிரமாக வேண்டும். பிரச்சாரம் செய்ய சமூக வலைதளத்தில் கட்டுப்பாடுகள் தேவை இல்லை. தேர்தலுக்கு பின் கூட்டணி சேர வாய்ப்புள்ள மற்றும் வாய்ப்பில்லாத காட்சிகள் என ஒவ்வொரு கட்சியும் கட்டாயம் ஒரு பட்டியல் வெளியிட வேண்டும், அதை தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிட வேண்டும். வாக்காளருக்கு திரும்பப் பெறும் அதிகாரம் தேவை. ஆகவே இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை இப்போது இருக்கும் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா என அறியும் வகையில் முன்பே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் இணைய வழியில் ஒரு கருத்துக் கேட்பு நடத்தி அதை வெளியிட வேண்டும். இவர்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் 80% மேல் அதிருப்தி தெரிவித்தால் அந்த தொகுதியில் இப்போதுள்ள சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்வதா வேண்டாமா என ஒரு திரும்பப் பெறும் தேர்தல் நடத்த வேண்டும். அந்த உறுப்பினர் வாக்காளரின் ஆதரவை இழந்தால் எஞ்சியுள்ள இரண்டரை ஆண்டுக்கான ஒரு மறுதேர்தல் நடத்த வேண்டும்.
முன் மாதிரி வாக்காளர்:
வாக்களிக்க பணம் பெறாத சுயமரியாதை மிக்கவராக இருக்க வேண்டும். அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்டம் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசு அதிகாரங்கள், MP, MLA அதிகாரங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். தன்னிடம் வந்து சேரும் தகவலை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தாமே முயன்று அரசியல் நிலவரத்தை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் செய்தித்தாள் படிப்பவராக இருந்தல் வேண்டும். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை வாசித்தவராக இருத்தல் வேண்டும். போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களை பற்றியும் அறிந்து கொண்ட பின்பே யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கைகளை நிலைப்பாடுகளை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்பவராக இருத்தல் வேண்டும். திரைப்படம், பிரபல்யம், வாரிசு என்பதை ஒரு தகுதியாக கருதாமல் ஒரு வேட்பாளர் போட்டியிடும் முன்பு செய்த சேவை என்ன என்பதை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்சியை மைய்யப்படுத்தி வாக்களிப்பதை விட வேட்பாளரை மைய்யப்படுத்தி வாக்களிக்க வேண்டும். இப்போதுள்ள அரசியல் நிலைக்கு தன்னைப் போன்ற முந்தைய தலைமுறை தான் காரணம் என்பதை உணர்ந்தவராக இருத்தல் வேண்டும். முன்னர் இருந்து மறைந்ததாலேயே அவர் முன்மாதிரி முதல்வர்/ தலைவர் அல்ல என்கிற சிந்தனை பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். வாக்களிக்கும் முடிவுக்கு வர குறைந்தபட்சம் சில மணிநேரம் சிந்திக்க வேண்டும். வாக்களிக்கும் சில வாரங்கள் முன் நண்பர்கள் குடும்பத்தினர் உடன் உரையாடி யாருக்கு வாக்களிப்பது என இரண்டு நாட்கள் முன்பே முடிவுக்கு வர வேண்டும். நான் ஒருவர் மாறினால் எதுவும் நிகழாது ஆகவே வெல்லும் வாய்ப்புள்ள வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு வாக்களிப்போம் என்கிற மந்தை மனோபாவம் இல்லாமல் வெற்றி வாய்ப்பு குறைந்த வேட்பாளர் என்றாலும் தரமிக்கவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யும் முயற்சி உடையவராக இருத்தல் வேண்டும்.
முன் மாதிரி கட்சி:
இணையத்தில் நிதி வரவு செலவு உட்பட அனைத்தையும் வெளியிட வேண்டும். தலைமைக்கு விசுவாசம் என்கிற போக்கு நீக்கப்பட்டு பணியாற்ற முன் வருதல் எனும் போக்கு ஊக்குவிக்கப் பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் வலுவாக இருக்க வேண்டும். கட்சியில் ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் சேர்க்க நீக்கப் பட்டவர் பட்டியல் வெளியிட வேண்டும். குறைந்த காலத்தில் ஒருவர் கட்சியில் சேர்ந்து கட்சிப் பதவி பெறுவது, MLA, MP போன்று அதிகாரம் பெறுவது தடை செய்யப் பட வேண்டும். குற்ற வழக்குகள் உள்ளோர் பட்டியல் வெளியிட வேண்டும். பொதுமக்கள் ஒரு உறுப்பினர் மீது புகார் செய்ய வழிவகை செய்யப் பட்டிருக்க வேண்டும். கட்சித் தலைவர், பொதுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்கும் நபர்கள் ஆகியோர்களை கட்சி உறுப்பினர்கள் தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
கட்சியின் சித்தாந்தம் கொள்கைகள் நிலைப்பாடுகள் கட்சி விதிகள் ஆகியவற்றை கட்சி உறுப்பினர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை சித்தாந்தம் கொள்கைகள் நிலைப்பாடுகள் விதிகள் ஆகியவற்றின் மாற்றத்தை அறிவிக்க வேண்டும்.10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் கட்சி தலைவராக இருக்கக் கூடாது, அவரின் ரத்த உறவுகள் கட்சியின் எந்த உயர் பதவிக்கும் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு முறை கட்சித் தலைவர் பத்திரிக்கையாளர்களை நேரலையில் சந்திக்க வேண்டும். பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூறித்து ஏற்பு மறுப்புகளை தெரிவித்தல் வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்குமான தேர்தல் அறிக்கைகளில் நிறைவேற்றியவை நிறைவேற்ற இயலாதவை, தற்போது செய்துள்ள மாற்றங்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
No responses yet