
இந்த விருது நேர்மையான அரசு ஊழியர்களுக்கு நேர்மையான அரசு அதிகாரிகளின் கையால் வழங்கப்படும் விருது. இந்த முறை அவ்வாறு இரண்டு பேருக்கு இந்த விருதை வழங்கி உள்ளோம். அத்தாணியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஃபோர்மேனாக பணிபுரியும் குருசாமி என்பவருக்கும் தாளவாடியில் வருவாய் துறையில் நிலஅளவராக பணிபுரியும் சொக்கலிங்கம் என்பவருக்கும் விருது வழங்கினோம். IAS அதிகாரி மேகாலயாவின் செயலாளராக இருக்கும் ராம்குமார் அவர்களும், அந்தியூரில் கூட்டுறவு சார்பதிவாளராக இருக்கும் சாகுல் ஹமீது என்பவரும் விருது வழங்கி சிறப்பித்தனர். இருவருக்கும் விருதாக காந்தி சிலையினை பரிசளித்தோம். சிறப்பு விருந்தினர்களாக அறப்போர் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்களும், குக்கூ காட்டுபள்ளியின் சிவராஜ் அவர்களும் வாந்திருந்தினர்.
இதன் விருதாளர்களை தேர்ந்தெடுப்பதில் சில கருதுகோள்கள் உண்டு. அவர் அதிகம் பணம் புலங்கக்கூடிய துறையில் இருக்க வேண்டும். அவ்வாறு தான் வருவாய் துறையும், மின்சார துறையும் தேர்ந்தெடுத்தோம். மக்களை எதிர்கொள்ளக்கூடிய கடைநிலை ஊழியராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சம்பளத்திற்கு மேல் இருக்கக் கூடாது. குறைந்தது ஏழு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். பணம் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கக் கூடாது.

ஆனால் இம்முறை விருது பெரும் சொக்கலிங்கம் மூன்று ஆண்டு மட்டுமே பணி செய்து உள்ளார். இந்த விருதை அவருக்கு அளிப்பதன் மூலம் அவரிடமிருந்து ஒரு வாக்குறுதியை பெறுகிறோம்.
குருசாமி இப்போது இருக்கும் திடத்துடன் முன்பு இருந்திருக்கவில்லை. அவர் ஒரு மனிதனின் நேர்நிலை மாற்றத்தின் சாட்சி. இருபது ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டில் வழக்கறிஞர் கிருஷ்ணன் இதே போன்ற நேர்வழி விருது விழாவை அவர் கல்லூரி முடித்த காலத்தில் நடத்தியுள்ளார். அப்போது மனம் மாறி நேர்மையானவராக மாறிய ஒரு நீதிமன்ற பணியாளருக்கு விருது அளித்து உள்ளனர். முதல் சறுக்கலை பின்னர் சரி செய்து கொள்ள இயலும் என்பதற்கான சான்று இவர்கள். குருசாமி இப்போது அவர் நேர்மையாக இருப்பதன் பொருட்டு அடையும் கர்வத்தையும் நிமிர்வையும் அவருடன் பேசும் போது உணர முடியும். தன் கடந்த கால பிழைகளை எந்த திரைகளும் இன்றி எடுத்து முன்னால் வைப்பதற்கு சாதாரணமாக அனைவராலும் இயலாது.

இந்த விழாவின் மூலம் சமூகத்திற்கு நாங்கள் ஒரு சிறிய ஆனால் கூரிய ஒளியை காட்டுகிறோம். சில முன்மாதிரிகளை முன்வைக்கிறோம். மெல்ல மெல்ல ஒரு சமூகம் மாறுவற்கான தொடக்க விதைகளை விதைக்கிறோம். இது நாங்கள் நடத்தும் இரண்டாவது விழா. 20 மாணவர்கள் சேர்ந்து இதுவரை சுமார் 10 நேர்மையான அரசு அதிகாரிகளை முன்வைத்து உள்ளோம். ஒரு கிராமத்தையும் ஒரு தேர்தலில் நேர்மையாக வாக்களிக்க வைத்துள்ளோம்.

இப்போது இன்னொரு கிராமத்தில் அதையே திரும்ப செய்ய உள்ளோம். அதன் தொடக்கமாக இந்த விழாவின் ஒரு பகுதியாக அந்த ஊரில் நேர்மைக் கடை என்கிற பெயரில் ஒரு கடையை திறந்துள்ளோம். IAS, ராம்குமார் இதை திறந்து வைத்தார். இது ஒரு கூண்டு போன்ற அமைப்பு. இதில் சில பொருட்கள் வைத்திருப்போம். அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அதற்கான உரிய தொகையை அங்குள்ள QR Code ஸ்கேன் மூலம் பணத்தை செலுத்தி விடலாம். இந்த கடையை பாதுகாக்கவோ பொருளை எடுத்துத் தரவோ யாரும் இருக்க மாட்டார்கள். யாராவது திருடினாலும் யாரும் கேட்கப் போவது இல்லை. ஆனால் இதற்கு முன் இதே போன்ற கடையை நாங்கள் பெருந்தலையூரில் வைத்திருந்தோம். அதில் ஒரு பொருளோ ஒரு ரூபாய் பணமோ திருடு போகவில்லை. இதில் பொருளை எடுப்பவரின் மனசாட்சி தான் இந்த கடையின் பாதுகாவலர். இதன் மூலம் அந்த ஊர் மக்கள் மெல்ல மெல்ல நேர்மையின் பக்கம் திரும்புவார்கள் என்று நம்புகிறோம். நேர்மையான அதிகாரிகளை முன்மாதிரிகளாக இப்போது காட்டியது போல் இந்த ஊரையும் வெகு சீக்கிரத்தில் முன்மாதிரி மக்கள் வாழும் கிராமம் என்று காட்ட முடியும் என்று நம்புகிறோம்.
No responses yet