13. அருணா ராய் சந்திப்பு

26.09.25 அன்று அதிகாலை 2:30 மணிக்கு ஈரோட்டில் இருந்து நாங்கள் 16 பேர் அருணா ராய் அவர்களை சந்திப்பதற்காக ராஜஸ்தான் புறப்பட்டோம். எங்களின் முதல் நிறுத்தம் அகமதாபாத்தில். செப்டம்பர் 27 ஆம் தேதி மதியம் அகமதாபாத்தில் இறங்கி ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று ஆங்கிலத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி அங்குள்ள மக்களுக்களிடம் பிரச்சாரம் செய்தோம். அன்று மாலை சபர்மதி சென்றோம். அன்றைய அந்தி என் வாழ்வில் ஒரு செழுமையான துண்டு. சபர்மதி ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு இடமும் சொல்லி கடத்த முடியாத ஒரு உணர்வு நிலையை அளித்தது. காந்தி வாழ்ந்த வீட்டில் சிறிது நேரம் அமர்ந்திருந்திருதேன். அந்த இருப்பு காந்தியுடனான என் மானசீக உரையாடல்.

துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம்

சபர்மதி ஆசிரமத்தில்

அடுத்த நாள் அகமதாபாத்தில் உள்ள அடலஜ் படிக்கிணறு சென்றோம். அது இன்று ஒரு காதலின் நினைவு சின்னம். இது போன்ற இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு வரலாற்றுணர்வு வந்து விடுகிறது. அது அந்த அனுபவத்தை மேலும் செழுமையாக்குகிறது. செப்டெம்பர் 28 ஆம் தேதி இரவு ராஜஸ்தான் மாநிலத்தில் பீம் என்னும் ஊரின் அருகில் உள்ள MKSS அமைப்பின் கிளை அமைப்பான School for democracy என்னும் இடத்திற்கு சென்று சேர்ந்தோம். எங்கள் முழு பயணத்தையும் ஷூபம் என்பவர் தான் ஒருங்கிணைத்தார். அவர் அஸ்ஸாமை சேர்ந்த இளைஞர்.

அடுத்த நாள் NREGA என்னும் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ராஜஸ்தான் கிராமவாசிகளை சென்று சந்தித்து பேசினோம். நாங்கள் கிளம்பும் போது எங்களுக்காக அவர்கள் பாட்டு பாடி நடனமாடி அனுப்பி வைத்தனர். மதியம் MKSS அமைப்பு குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஷூபம் மற்றும் லால் சிங் இருவரும் ஒரு வகுப்பு எடுத்தனர். மாலை மீண்டும் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களின் ஓய்வூதிய உதவித் தொகை குறித்தான கூட்டத்தில் சங்கர் சிங் பேசுவதை பார்த்தோம். அவற்றை ஷூபம் எங்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னார்.

செப்டெம்பர் 30 காலை school for democracy இல் இருந்து கிளம்பி MKSS அமைப்பின் பிறப்பிடமான தேவ் தூங்கரி என்னும் ஊருக்கு சென்றோம். அங்கு அருணா ராய், சங்கர் சிங் ஆகியோர் தங்கிய மண் குடிலுக்கு சென்றோம். சங்கர் சிங் அவர்களின் பயணத்தை சுருக்கமாக சொன்னார். அவரின் சிறப்பம்சமான பொம்மலாட்டங்களை செய்து காண்பித்தார். அந்த வீட்டில் உணவு உண்டுவிட்டு கிளம்பி பியாவர் என்னும் இடத்தில் புதிதாக RTI அருங்காட்சியகம் அமையவிருக்கும் இடத்தை பார்த்தோம். ஆங்கிருத்து மீண்டும் கிளம்பி சென்று முன்முதலில் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக தர்ணா செய்த இடத்திற்கு சென்று அங்கு வைக்கப் பட்டு இருக்கும் ஒரு நினைவுச் சின்னத்தை பார்த்தோம்.

தேவ் துங்கரியில் அருணா ராய் வாழ்ந்த குடிலின் முன்..

செப்டம்பர் 30 மாலை அருணா ராய் இப்போது தங்கி இருக்கும் தன்னுடைய கணவரின் Barefoot கல்லூரிக்கு சென்றோம். அக்டோபர் 1 ஆம் தேதி காலையில் இருந்து அந்த கல்லூரியை சுற்றிப் பார்த்தோம். கைத்தறி நெசவு, வீணான பொருட்களை கலை பொருளாக மாற்றுவது, மரத்தாலான கைவினை பொருட்கள் என்று ஏராளமாக இருந்தன. மருத்துவம், தோட்டக் கலை போன்றவையும் அங்கு இருந்தன. ஒரு காந்திய அமைப்பு என்று பார்த்த உடனே தெரிந்துவிடும். அன்று மாலை 3 மணிக்கு நிகில் டே அவர்களை சந்தித்து பேசினோம். நாங்கள் அவரிடம் கேள்வி கேட்பதற்கு மாறாக அவர் எங்களிடம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தார். இன்னும் பத்து வருடத்தில் இந்த சமூகத்தில் நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன அதை அடைய நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டார். அவற்றுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அருணா ராய் வந்துவிட்டார்.

எங்களிடம் தமிழிலேயே பேசத் தொடங்கினார். அவரிடம் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகளை முன்னரே அவருக்கு அனுப்பி வைத்து இருந்தோம். அதை அச்சிட்டு எடுத்து வந்து சில கேள்விகளுக்கு பதில் சொன்னார். அதில் எங்களுக்கு ஆச்சர்யமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்த பதில் என்பது அறிவு என்பது கல்வியாலோ புத்தகத்தாலோ வந்துவிடாது, படிக்காத பல அறிவாளிகள் உள்ளனர். அவர்கள் செய்வதை படித்தவர்களால் செய்ய இயலாது என்று அவர் சொன்னது. நான்கு வயதில் இருந்து தொடர்ந்து படித்து வரக்கூடிய ஒருவரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அருணா ராய் மற்றும் நிகில் டே உடன்..

சிறிது நேரத்திற்கு மேல் அவர் உடல் தளர்ந்து விட்டது. படுக்கைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார். இறுதியாக அவரிடம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எங்கள் புத்தகங்களில் கையெழுத்திட்டு தந்தார். அவருடனான இருப்பு ஒரு ஆன்மிக அனுபவம். அருணா ராய், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆகியோருடன் இருப்பது ஒருவித கனிந்த உள்ளத்துடன் உரையாடுவது போன்ற உணர்வை தருகிறது. அதே சமயம் பெரும் ஆளுமையுடன், ஒரு வரலாற்றுடன் இருக்கும் தீவிர மனநிலையையும் தருகிறது. அருணா ராய் விடைபெறும் போது எங்களை ஒரு தமிழ் பாடல் பாட சொல்லி கேட்டார். நாங்கள் யமுனை ஆற்றிலே பாடலை பாடினோம்.

இரவுணவிற்கு பின் மீண்டும் நிகில் டே உடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அது ஒரு விதத்தில் விவாதம் தான். ஒரு தொகுதியில் மோசமான அரசியல் கட்சி நல்ல வேட்பாளரை நிறுத்துகிறது, நல்ல அரசியல் கட்சி மோசமான வேட்பாளரை நிறுத்துகிறது. நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது விவாதம். எங்களில் பெரும்பாலானவர்கள் நல்ல வேட்பாளரே முக்கியம் என்னும் தரப்பு. நிகில் டே நல்ல அரசியல் கட்சியே முக்கியம் என்னும் தரப்பு. அந்த உரையாடல் பல்வேறு விதமான கேள்விகளை அளித்துள்ளது. அடுத்த நாள் அக்டோபர் 2 அருணா ராய் அவர்களுடன் சேர்ந்து காந்தி ஜெயந்தி கொண்டாடினோம். எங்கள் அனைவருக்கும் அவர் இனிப்புகள் வழங்கினார். 2000 கிலோமீட்டர் பயணம் செய்து ஒரு மாபெரும் ஆளுமையுடன் ஒரு நாளை கழிப்பது என்பது எங்கள் அனைவருக்கும் வாய்த்த நல்லூழ்.

சிபி, முனை இளைஞர் சங்கம்.

CATEGORIES:

Uncategorized

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *