அம்மாபாளையம் திட்டம்
ஒரு கிராமத்தை தேர்வு செய்து காந்திய விழுமியங்களை நிலவச் செய்து ஒரு தன்னிறைவு மிக்க முன் மாதிரியான கிராமமாக அதை உருவாக்குதல் என்பது நோக்கம். அதன் படி ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்காவில் பவானி ஆற்றில் ஒரு தீவு போல அமைந்து உள்ள சிறிய கிராமமான அம்மாபாளையத்தை தேர்வு செய்தோம். அம்மாபாளையம் ஊராட்சி அம்மாபாளையம், கணேசன்புதூர் ஆகிய இரண்டு ஊர்களை உள்ளடக்கியது. மொத்தம் சுமார் 250 – 300 வீடுகளும் 1200 பேர் கொண்ட மக்கள் தொகை உள்ள சிறிய ஊர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 836. இங்கு துவக்கப் பள்ளியும் ஒரு அங்கன்வாடி மையமும் உள்ளது. விவசாயம் பிரதான தொழில். ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் இது ஒரு அழகிய, சுற்றுலாவிற்கு வாய்ப்புள்ள கிராமம்.

அம்மாபாளையம் அலுவலகம்
26.10.24 அன்று பணி துவங்கியது. ஒரு ஊருக்கு சென்றவுடன் வழக்கமாக செய்யும் தூய்மை பணிகள், குப்பைக் கூடை வழங்குதல், கோலப் போட்டி நடத்துதல், திரைப்படம் திரையிடுதல் போன்று மக்களுடன் இணக்கமாவதற்கான பணிகளை முதலில் மேற்கொண்டோம். ஊர் மக்களின் ஆதரவு நல்ல விதமாகவே இருந்தது. எங்கள் ஆலோசகர் நவநீதன் என்பவரின் உறவினர்கள், நண்பர்கள் சிலர் இந்த ஊரில் இருந்தது அனுகூலமாக அமைந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசேகர், ஊர் மக்கள் சிவகுமார், மல்லிகா போன்றவர்கள் குறிப்பிட்ட அளவு ஆதரவு அளித்தனர். கிராம மக்கள் மாணவிகள் தங்குவதற்கு இலவச வீட்டை வழங்கினர்.
தொடக்கத்தில் மேகவர்ஷினி மற்றும் அருள்ஜோதி இருவரும் அந்த ஊரில் தங்கினார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களால் தொடர்ந்து தங்க முடியாமல் போனதால் அவர்களுக்கு பதிலாக இலக்கியா, லைலா பானு உள்ளிட்டோர் தங்கினர். நாங்கள் நேர்மையான அரசு ஊழியர்களுக்கு வழங்கும் நேர்வழி விருது விழாவிற்கு முதலில் இந்த அம்மாபாளையம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் சுபா அவர்களை இரண்டு விருதாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து இதே ஊரில் 12.12.24 அன்று ஒரு காந்தி சிலையை விருதாக வழங்கினோம். அதன் மூலமும் மக்களிடம் மேலும் இணக்கமாக முடிந்தது. அன்றில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு நாள் நேர்மை என்கிற திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளோம்.
2025 ஆம் ஆண்டின் நேர்வழி விருது விழாவும் அதே ஊரில் நடத்தினோம். அதன் பிறகு இந்த ஊரில் நேர்மைக் கடை என்று ஒன்றை தொடங்கி உள்ளோம். அது ஒரு கூண்டு போன்ற அமைப்பு. அதில் சில பொருட்கள் இருக்கும் ஆனால் அதை எடுத்து கொடுப்பதற்கோ கண்காணிப்பதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள் மக்களே பொருளை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை அங்குள்ள QR Code மூலமோ அல்லது உண்டியலிலோ செலுத்தி செல்லலாம். பணம் செலுத்தாமல் பொருளை எடுத்தாலும் எதுவும் கேட்கப் போவது இல்லை. மக்களின் நேர்மையை அவர்களே சோதித்துக் கொள்வதற்கான ஒரு இடம் மட்டுமே. அப்படி இதுவரை சுமார் 3500 ரூபாய்க்கான பொருள் எடுக்கப்பட்டு 1600 ரூபாய்க்கான தொகை மட்டுமே செலுத்தப் பட்டுள்ளது.
இப்படி மெல்ல மெல்ல தூய்மைப்பணிகள் போன்றவற்றில் இருந்து நேர்மையை வழியுறுத்தும் பிரச்சாரங்களை செய்யத் தொடங்கினோம். அதன் நீட்சியாக ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நாங்கள் இரண்டாவது ஆண்டாக கடந்த ஜனவரி 2026 இல் கோபி முதல் சென்னை வரை 450 கிமீ நடைபயணம் மேற்கொள்ளும் போது அதன் தொடக்க நிகழ்விற்கு அம்மாபாளையத்தை சேர்ந்த சிலர் வந்து தாங்கள் வாக்குக்கு பணம் வாங்க மாட்டேன் என்று கைரேகை வைத்தனர். அந்த நடைபயணத்தில் ஒரு இரவு அம்மாபாளையத்தில் தங்கி சென்றோம்.
இறுதியாக மார்ச் 2026 முதல் நாங்கள் இந்த ஊருக்கு வந்ததன் பிரதான நோக்கமான வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் என்கிற பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டோம். முதலில் துண்டு பிரசுரங்கள் வழங்குதலில் இருந்து தொடங்கினோம். வெகு சிலரை தவிர பெரிதாக யாரும் எங்கள் பிரச்சாரத்தை எதிர்த்து வாதிடவில்லை. சிலர் மட்டும் வழக்கமான கொடுப்பவரிடம் சொல்லுங்கள், யார் தான் வாங்கவில்லை போன்ற கேள்விகளை கேட்டனர். நாங்கள் இந்த கேள்விகளைத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறோம். ஆகவே எளிதில் அதற்கான பதில்களை சொல்லிவிட்டோம். இறுதியாக “நானெல்லாம் வாங்கறதே இல்ல” என்பார்கள். அப்படியென்றால் சரி நேர்மையான வாக்களர்களுக்கு ஒரு பேனர் வைக்கிறோம் அதற்கு உங்கள் புகைப்படம் தருகிறீர்களா என்று கேட்டு விடுவோம். ஆண்களாக இருந்தால் “அதெல்லாம் சொல்ல முடியாது பா. நம்ம வீட்டுல பொம்பளைங்க எதாச்சு வாங்கீருப்பாங்க நமக்கு தெரியாது. நா வீட்டுல கேட்டுட்டு சொல்ற போய்ட்டு வாங்க.” என்பார்கள். இதே பெண்களாக இருந்தால், “நா வீட்டுல கேட்டுட்டு சொல்ற சாமி. எதுக்கு லே கேக்கக்காம போட்டோ குடுத்த நீயுனு வீட்டுல பேசுவாங்க.” என்பார்கள். வெகு சிலர் அவ்வாறு தங்கள் புகைப்படத்தை கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். அப்படி 5 ஆண்கள், 1 பெண் என்று ஆறு பேரும் “நான் சுயமரியாதை மிக்கவன். என்னுடைய வாக்கு மதிப்புமிக்கது. அதை விற்க மாட்டேன்.” என்று உறுதிமொழி கொடுப்பது போல் அம்மாபாளையம், கணேசன்புதூர் இரண்டு ஊர்களிலும் தட்டிகள் வைத்தோம்.

அதில் ஒருவர் தி. மு. க உறுப்பினர். அவர் தன்னுடைய சுவரை எங்களுக்கு கொடுத்தார். அதில் நம் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று எழுதினோம். இன்னொரு நபரை ஒருமுறை குடித்துவிட்டு தி. மு. க கட்சி பிரச்சாரத்தில் உடன் செல்வதை பார்த்தோம். பின்னர் நாங்கள் ஒரு விளையாட்டு போட்டி நடத்தும் போது அங்கு வந்து தனக்கு ஏதேனும் பரிசு கொடுக்கும் படி கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தார். “நான் தா போட்டோ குடுத்துருக்க எனக்கு ஒரு பரிசு குடுங்க” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அருகில் இருந்தவர்கள் “இவர் ஓட்டுக்கு பணம் வாங்காவிட்டாலும் சாராயம் வாங்கி குடித்து விடுவார்” என்று சொல்லிச் சென்றார்கள். அதன் பிறகு உறுப்பினர்கள் அனைவரும் பேசி அவரின் புகைபடத்தை அகற்றி விட்டோம்.


ஊரின் ஒவ்வொரு முக்கிய இடத்திலும் நேர்மையாக வாக்களியுங்கள், நம் வாக்கு விற்பனைக்கு அல்ல என்கிற தட்டி இருக்கும். பெருந்தலையூரில் முக்கிய இடங்களில் நேர்மையாக வாக்களியுங்கள் என்று கீழே சாலைகளில் எழுதினோம். அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரவில் தான் எழுத முடியும். ஆனால் பெரிதாக பலன் இல்லை. பெரும்பாலும் யாரும் அதை கவனிக்கவில்லை. ஆகவே இந்த முறை எங்கள் திட்டத்தை சற்று மாற்றி சுவர்களில் எழுதினோம். அரசு சுவர்கள், பொதுமக்களின் தனிப்பட்ட சுவர்கள் என்று சுமார் ஏழுக்கும் மேற்பட்ட சுவர்களில் “நம் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்று எழுதியுள்ளோம். ஊரின் தொடக்கத்தில் ஒரு தோட்டத்தின் நீண்ட சுற்றுச் சுவர் இருந்தது. அங்கு எழுதினால் நன்றாக இருக்கும் என்று அந்த இடத்தின் உரிமையாளரிடம் கேட்டோம். அவர் உடனடியாக இதற்கெல்லாம் நீங்கள் தயங்கவே வேண்டாம் தைரியமாக எழுதுங்கள் என்று சொல்லி அனுமதி வழங்கினார். நீண்ட வாசகமாக அதை அங்கு எழுதியுள்ளோம். அம்மாபாளையம் கிராமத்திற்குள் வந்துவிட்டு ஒருவர் திரும்பினால் எங்கள் பிரச்சாரத்தை பார்க்காமல் அவர் செல்லவே முடியாது.

அனைத்து வீடுகளிலும் நம் வாக்கு விற்பனைக்கு அல்ல என்கிற ஸ்டிக்கர்களை மக்கள் அனுமதியுடன் ஒட்டி உள்ளோம். அம்மாபாளையம் மட்டுமல்லாது அத்தாணி, கீழவாணி, மேவானி, பெருந்தலையூர் ஆகிய ஊர்களிலும் இந்த பிரச்சாரத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை மேற்கொண்டிருப்போம். அங்கும் ஸ்டிக்கர்கள் ஒத்தினோம். கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது பெருந்தலையூரில் ஒட்டிய ஸ்டிக்கர்கள் பல வீடுகளில் இன்னும் கிழிக்கப்படாமல் இருந்தன.
நாங்கள் மக்களுடன் ஏதேனும் பேசவேண்டும் என்றால் பொதுவாக ஏதேனும் விளையாட்டுப் போட்டி நடத்தி அதை காரணமாக வைத்து அதிக மக்களை ஒன்று திரட்டி பேசுவோம். அவ்வாறு இதற்கு முன்பு பொதுவாக பெண்களுக்கான கோலப் போட்டி தான் வைத்து உள்ளோம். இந்த ஊரில் ஏற்கனவே வேறு ஒரு முறை கோலப் போட்டி வைத்துவிட்டதால் பெரியவர்கள் சிறியவர்களுக்கான தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர், உரி அடித்தல், ஓவியம் என்று உள்ளூர் விளையாட்டுக்கள் கலந்து இரண்டு ஊரில் தனித்தனி நாள் வைத்தோம். அதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே ஆட்கள் வந்திருந்தனர். இது மாதிரியான போட்டிகளில் குடும்பமாக விளையாடும் வாய்ப்பு உள்ளது. தான் விளையாடாவிட்டாலும் வேடிக்கை பார்ப்பதற்காவே கூட ஆட்கள் வருவார்கள். அப்படி சேர்ந்த கூட்டத்தில் எங்கள் பிரச்சாரத்தை முன்வைத்து பேசினோம். மேலும் கணேசன்புதூர், அம்மாபாளையத்தில் உள்ள இளைஞர்களை எங்களின் ஆதரவாளர்களாக மாற்றும் பொருட்டு அவர்களுடன் கிரிக்கெட் போட்டி சேர்ந்து விளையாடி ஒரு நட்பை ஏற்படுத்தினோம். அதிலிருந்து ஒன்றிரண்டு பேர் பின்னர் சில பிரச்சாரங்களில் பங்கேற்றனர்.
சென்ற முறை போலவே இந்த முறையும் ஒரு மௌன ஊர்வலம் திட்டமித்திருந்தோம். ஆனால் பெரிதாக உள்ளூர்க்காரர்கள் என்று யாரும் இந்த முறை கலந்து கொள்ளவில்லை. கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் நான்கைந்து பேர் உடன் வந்தனர். ஆனால் இந்த ஊர்வலம் பெரிதாக மக்களின் கவனத்தை ஈர்த்தது என்று சொல்ல முடியாது. சென்ற முறை பெருந்தலையூரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மக்கள் எங்கள் உடன் நடந்து வந்தனர். இந்த முறை மக்களிடன் இதை நாங்கள் சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். அல்லது குறிப்பிட்ட சிலரை மட்டும் குறிவைத்து திரும்ப திரும்ப லைத்திருந்தால் இந்த ஊர்வலத்திற்கு சற்று அதிக கூட்டம் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சுமார் 300 க்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் “நான் வாக்களிக்க பணம் பெற மாட்டேன்” என்று உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்து வாங்கினோம். சிலர் கையெழுத்திட தயங்கி போடவில்லை. சிலர் நான் வாங்க மாட்டேன் கையெழுத்தெல்லாம் போட முடியாது என்று சொன்னார்கள். சிலர் நான் வாங்கிவிடுவேன் நான் போட மாட்டேன் என்று சொன்னார்கள். சிலர் வீட்டில் கேட்டு போட வேண்டும் என்று சொன்னார்கள். இது எல்லாமே பணம் வாங்குவதற்கான சாக்குகள் தான். பிரச்சாரத்தின் இறுதி நாள், தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு இரண்டு ஊர்களிலும் யோகி பாபு நடித்த மண்டேலா என்னும் திறப்படத்தை திரையிட்டாம். குறைவான ஆட்களே படத்தை பார்த்தனர். ஆனால் அது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக சிலர் சொன்னார்கள்.


நாங்கள் எப்போது இரண்டு முனைகளில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கிறோம். பொது மக்களிடம் எப்படி ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்கிறோமோ அதே போல் அரசியல் கட்சிகளிடம் ஓட்டுக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றும் சொல்லி வருகிறோம். அதன்படி இந்த கிராமத்தில் உள்ள முக்கிய கட்சிகளை அழைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அதில் திமுக அதிமுக தவிர மற்ற கட்சிகள் யாரும் வந்து கலந்து கொள்ளவில்லை. அந்த கட்சி நபர்களிடம் இதை முன்வைத்து பேசினோம். அவர்கள் தங்கள் மேல் உள்ளவர்களிடம் இது குறித்து பேசி பார்க்கிறோம் என்று சொன்னார்கள். அதன்படி அவர்கள் கட்சி அந்தியூர் தொகுதி வேட்பாளரிடம் பேசிவிட்டு கடுமையான போட்டி நிகழ்வதால் கொடுக்காமல் இருக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால் அதன் பிறகு நாங்களும் நேரடியாக அனைத்து முக்கிய கட்சி வேட்பாளர்களையும் நேரில் சென்று சந்தித்து எங்களுடைய இந்த பிரச்சாரத்தை முன்வைத்து பேசி ஒரு கடிதம் வழங்கி வந்தோம்.
தேர்தலுக்கு முந்தைய நாள் வரை நாங்கள் அனைவரும் அம்மாபாளையத்தில் தான் தங்கி இருந்தோம். ஒரு நாள் முன்பு இரவில் நாங்கள் சும்மா ஊருக்குள் நடக்கும் போது இரவு 11 மணிக்கு ஊர் மக்கள் சிலர் வெளியே அமர்ந்திருந்தனர். சாலைகளில் நின்று, அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். வழக்கமாக இருப்பது போல் அல்லாமல் நீண்ட நேரமும் ஒரு வித குறுகுறு பார்வையுடன் தெரிந்தார்கள். நானும் கௌதமும் வண்டியில் சுற்றிக் கொண்டு இருக்கும் போது ஒருவர் கையில் பணம் வாங்குவதையும் பார்த்தோம். பிறகு பணம் கொடுத்தவர்கள் இரண்டு பேர் வண்டியிலும் இரண்டு பேர் நடந்தும் ஒரு குறுக்குத் தெருவிற்குள் சென்றார்கள்.

தேர்தல் முடிந்து சில நாட்கள் கழித்து நாங்கள் அந்த ஊரில் ஒரு மறைமுக சர்வே எடுத்தோம். அதாவது ஒரு உண்டியலும் ஒரு துண்டு காகிதமும் ஒருவரிடம் கொடுத்து விடுவோம். அந்த காகிதத்தில் ஆம், இல்லை என்று எழுதப்பட்டு இருக்கும். பணம் வாங்கி இருந்தால் ஆம் என்பதை டிக் செய்ய வேண்டும் வாங்காவிட்டால் இல்லை என்பதை டிக் செய்ய வேண்டும். இதை அவர்கள் எங்கள் முன்பு செய்ய வேண்டியது இல்லை. வீட்டிற்குள் சென்று டிக் செய்து அந்த உண்டியலில் போட்டு கொண்டு வந்து தர வேண்டும். 350 பேரிடம் மேற்கொண்ட அந்த சர்வே முடிவு பின்வருமாறு.
சர்வே செய்த மொத்த எண்ணிக்கை: 350
பணம் வாங்கியவர்கள்: 119
பணம் வாங்காதவர்கள்: 231

பணம் வாங்க மாட்டேன் என்று ஸ்டிக்கர் ஒட்ட அனுமதித்து, கையெழுத்தும் போட்டுக் கொடுத்து, எங்களிடம் உறுதியாக வாக்களித்த சிலர் பணம் வாங்கி இருந்தனர். அது எனக்கு தனிப்பட்ட முறையில் சங்கடத்தை அளித்தாலும் இந்த சட்டமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கு மேல் பணம் வாங்காமல் இருப்பதே ஒரு வெற்றி என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் மூன்று காட்சிகள் பணம் கொடுத்து உள்ளனர். சென்ற முறை பெருந்தலையூரில் மக்களவை தேர்தலில் இதைவிட மிகக் குறைவான பணமே விநியோகம் செய்யப்பட்டது. இங்கு ஒவ்வொரு கட்சியும் மிக அதிகமாக கொடுத்து உள்ளது. காந்திய வழிமுறை என்பது படிப் படியான மாற்றம் என்பது தான். அப்படி இரண்டு ஆண்டு முன்பு பெருந்தலையூரில் சிறிதாக நாங்கள் தொடங்கியது, நடைபயணம் என்று வளர்ந்து அதை பல்வேறு அமைப்புகள் தங்கள் கையில் எடுத்து தமிழகம் முழுக்க ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்கிற பிரச்சாரம் வலுப்பெற்று உள்ளது.

அறப்போர் இயக்கம் கிட்டத்தட்ட 6 மாதம் முறையாக திட்டமிட்டு தமிழகம் முழுக்க இதை ஒரு பேசுபொருளாக மாற்ற சில முயற்சிகள் எடுத்து உள்ளனர். வெவ்வேறு ஊர்களில் உள்ள தன்னார்வாளர்களை இந்த பிரச்சாரத்திற்காக பயிற்றுவித்து தனித் தனியாக நிறைய பேர் இதை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். நாங்கள் நடைபயணம் சென்றதில் ஈர்க்கப்பட்டு சென்னையில் ரகுநந்தன் என்கிற தனி நபர் சென்னையின் சில இடங்களில் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். எங்கள் ஆதரவாளர் முத்துக் குமார் தென்காசியில் இந்த பிரச்சாரத்தை அவர் உறவினர்களுடன் சேர்ந்து மேற்கொண்டார். இரண்டு நாள் முனை சார்பாக மூன்று பேர் சென்று அவருடன் சேர்ந்து கொண்டனர். ஒரு ஆட்டோ சங்கம் தங்கள் ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்தது. யாரோ ஒரு இரு சக்கரவாகனத்தில் நான் ஓட்டுக்கு பணம் பெற மாட்டேன் என்று ஒட்டி இருந்தது என்று இந்த பிரச்சாரம் தொடர்ச்சியாக கண்ணுக்கு தெரியாமல் பெரிதாக வளர்ந்து வருகிறது. எங்கள் அமைப்பின் உறுப்பினர் அனுஸ்ரீ சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவர் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல், பெறுதல் தொடர்பாக ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு பதில்கள் பெற்று உள்ளார். பெரும்பாலும் இதுவரை அவ்வாறு வழக்குகள் பதிவு செய்யப் படவில்லை. அரிதாக அங்கங்கு ஒன்றிரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் இந்த பிரச்சரத்தை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு போடுவதன் முயற்சியில் உள்ளார். ஆனால் இப்போது தேர்தல் ஆணையமும் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து பேனர் வைத்தல் போன்று சிலவற்றை செய்து உள்ளார்கள்.

ஒரு சிறு விதையில் இருந்து ஆல மரம் முளைத்து விருட்சமாவது போல இன்று இது ஒரு முக்கிய பேசு பொருள் ஆகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும் போதும் பணம் கொடுத்தால் அது எதிர்மறை விளைவாக மாறும் என்று உறுதியாகி உள்ளது. இன்னும் சில தேர்தல்களிலேயே தமிழகம் நேர்மையான தேர்தலுக்கான முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறோம். தொடர்ச்சியான நம்பிக்கையும் அதை நோக்கி சிறிய அலகுகளில் நீண்ட தொடர்ச்சியான செயல்பாடும் தான் காந்தியம் முன்வைக்கும் வழிமுறை. ஆகவே நம்பிக்கை வைப்போம்.
சிபி,
முனை இளைஞர் சங்கம் ஈரோடு.
Photos
03.08.25 கோலப் போட்டி



24.08.25 தூய்மை பணிகள்




24.08.25 மக்கும் குப்பை, மக்காத குப்பை கொட்டுவதற்கான தனித் தனி குப்பைக் கூடைகள் விநியோகம்

தனிவகுப்பு
மரம் நடும் பணி

நேரமைக் கடை

நேர்மையாக வாக்களித்தல் பிரச்சாரத் தட்டி

அம்மாபாளையம் அமைவிடம்: https://maps.app.goo.gl/USPaWAXoEgbVGxTBA
இதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த GBR Freight forwarders நிதி நல்குகிறது.

No responses yet